இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை
வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனர். சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார் தாத்தா. வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விரித்தார். துள்ளிக் குதித்தபடி ஏறி அமர்ந்தனர் இருபிள்ளைகளும்.
'ஜல் ஜல்' எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது. சாலையின் இருமருங்கிலும் பசுமை போர்த்திய வயல்வெளிகள். தாத்தா மாடுகளை விரட்டியபடி இனிமையாகப் பாடத் தொடங்கினார்.
பாடினது போதும். ஏதாவது கதை சொல்லுங்க தாத்தா என்றனர் பிள்ளைகள். சொல்லிட்டாப் போச்சி, கதையென்ன புதிர் போடறேனே. சொல்லுங்க பார்க்கலாம்
தாத்தா: மூன்றாம் எழுத்து உடலின் உறுப்பு, முதலும் மூன்றும் நட்புக்கு எதிரி, ஒன்றும் இரண்டும் நிறைய தரும், மூன்றும் சேர்ந்தால் உட்கார உதவும் அது என்ன?
இளமதி: ம்.......... விட்டு, 'தெரியலை' தாத்தா
தாத்தா: நல்லா ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு
இளமதி: 'கை' தாத்தா
தாத்தா: கொஞ்சமாயிருந்தா சில ன்னு சொல்லுவோம் நிறைய இருந்தா என்ன சொல்லுவோம்?
இளமதி: 'பல' தாத்தா ஆங்..........
மணவாளன்: எனக்குப் பதில் கிடைச்சிருச்சி.......... ‘பலகை’ – இது சரியா தாத்தா ..........
தாத்தா: நல்லது மிகச்சரியான பதில், இப்ப இளமதியைக் கேட்கிறேன்........... ஆறையும் ஐந்தையும் கூட்டினால் பணம் வராது........ ஆனா பழம் வரும் அது என்ன?
இளமதி: ........... ஆங் ............ கண்டுபிடிச்சிட்டேன் ............ ஆரஞ்சுப்பழம் தானே .............
தாத்தா: சரியா சொல்லிட்டியே, செல்லக்குட்டி மணவாளன்: சரி தாத்தா ........... இப்ப நாங்க கேட்கிறோம் ..... நீங்க சொல்லுங்க, பிறக்கும்போது நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன் ஊருக்கு ஊர் நிறம் மாறிச் சுவை மாறுவான் அவன் யார்?
தாத்தா எனக்கு தெரியுமே..........
இளமதி: தாத்தா பதிலைச் சொல்லுங்க. சீக்கிரம்.........
தாத்தா ம் ம் ம் .... எல்லாரோட தாகத்தையும் தீர்க்கும் தண்ணீர் தானே
மணவாளன்: ஆமா! ஆமா! சரியா சொல்லிட்டிங்களே!
இளமதி: தாத்தா, அத்தை வீடு வந்துவிட்டது.
தாத்தா சரி, சற்றுப் பொறுங்கள் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன். அனைவரும் வண்டியைவிட்டு இறங்கி, ஆவலுடன் வீட்டை நோக்கிச் சென்றனர்.